சாவ்லா பாலியல், கொலை வழக்கு தூக்கிலிருந்து 3 பேர் தப்பினர்: உச்ச நீதிமன்றம் விடுதலை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள சாவ்லா பகுதியில் வேலைக்கு சென்று விட்டு திரும்பிய உபி.யை சேர்ந்த 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டார். இது தொடர்பாக ரவிகுமார், ராகுல், வினோத் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம், மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். பின்னர், தங்களின் தண்டனையை குறைக்கும்படி 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை கடந்த ஏப்ரல் 6ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், திங்கட்கிழமை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, டெல்லி ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ததுடன், குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் போதவில்லை என்று கூறி மூவரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை கேட்ட அப்பெண்ணின் பெற்றோர், `நாட்டில் சட்டம் ஒழுங்கு ஏழைகளுக்கானது அல்ல,` என வேதனை தெரிவித்தனர்.

Related Stories: