பொன்பாடி சோதனை சாவடியில் சிறுநீர் கழிக்க சென்ற சென்னை வாலிபரை சரமாரி தாக்கி செல்போன், பணம் பறிப்பு: ஆஸ்பத்திரியில் கவலைக்கிடம்

திருவள்ளூர்: திருத்தணி அருகே பொன்பாடி சோதனை சாவடியில் சிறுநீர் கழிக்க சென்ற வாலிபரை சரமாரியாக தாக்கி செல்போன், பணம் பறித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தாக்குதலில் காயம் அடைந்தவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்பாடி சோதனை சாவடி பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தார். இதுபற்றி அப்பகுதி மக்கள் கொடுத்த தகவல்படி, திருத்தணி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு தலையில் பலத்த காயங்களுடன்  கிடந்த வாலிபரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், தாக்கப்பட்ட வாலிபர் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சதீஷ் என்று தெரியவந்துள்ளது. இவர் நேற்றிரவு திருப்பதிக்கு பஸ்சில் சென்றபோது தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் பஸ்சை நிறுத்தியபோது உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு சிறுநீர் கழிக்க சென்றபோது அங்கு மறைந்திருந்த 3 பேர் கட்டையாலும் கைகளாலும் சதீஷை சரமாரியாக தாக்கி அவர் வைத்திருந்த 3,800 ரூபாய் மற்றும் செல்போனை பறித்து தப்பினர் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து சதீஷ் கொடுத்துள்ள புகாரின்படி வழக்குபதிவு செய்துள்ள போலீசார், தாக்குதல் நடத்திய கும்பலை பற்றி விசாரிக்கின்றனர்.

Related Stories: