மலைப்பகுதியில் எஸ்பி அதிரடி நிலத்தில் கஞ்சா பயிரிட்ட பெண் உட்பட 2 பேர் கைது: நாட்டுத்துப்பாக்கியை வீசிவிட்டு ஓடியவருக்கு வலை

ஒடுகத்தூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம், பேரணாம்பட்டு போன்ற பகுதிகளில்  கடந்த சில மாதங்களாக மலை பகுதிகளிலும், வீட்டு அருகே உள்ள தோட்டத்திலும் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தேந்தூர் மலை கிராமத்தில் காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக எஸ்பி ராஜேஷ்கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, எஸ்பி தலைமையில் டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று தேந்தூர் மலை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, போலீசாரை பார்த்தும் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை கீழே வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். மேலும் அங்கிருந்த பெண் உட்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த கமலா(45), முத்துக்குமார்(21) என்பதும், நாட்டுத்துப்பாக்கியை வீசிவிட்ட ஓடியவர் கமலாவின் கணவர் ரவி(50) என்பது தெரியவந்தது. இவர்கள் காட்டு பகுதியில் உள்ள தங்களின் விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளனர். இதையடுத்து, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் கமலா, முத்துகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் பயிரிட்டு சுமார் 2 அடி உயரத்திற்கு வளர்ந்திருந்த கஞ்சா செடிகள் மற்றும் உலர்த்தி வைக்கப்பட்டிருந்த கஞ்சா இலைகளையும் கூடையோடு பறிமுதல் செய்தனர்.

Related Stories: