மகளிர் இடஒதுக்கீடு மசோதா மறுதாக்கல் செய்யப்படுமா? அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2010ம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2014ல் ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த மசோதா காலாவதியானது. இதன் பின் மீண்டும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமலேயே உள்ளது.

இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யக் கோரி இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், ‘‘நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆன பிறகும் கூட பெண்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவம் செய்கிறார். ஆனால், நாடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் வெறும் 14% மட்டுமே,’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இது ஒரு முக்கியமான பிரச்னை. எனவே இந்த விஷயத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்,’ என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

Related Stories: