சித்தூர் லெனின் நகரில் கலெக்டர் ஆய்வு மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரிக்க கூடுதல் இயந்திரங்கள் வழங்கப்படும்-மாவட்ட கலெக்டர் உறுதி

சித்தூர் : சித்தூர் லெனின் நகரில் உள்ள குப்பை கிடங்கை ஆய்வு செய்தபோது மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரிக்க கூடுதல் இயந்திரங்கள் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் முருகன் ஹரி நாராயணன் தெரிவித்துள்ளார். சித்தூர் லெனின் நகரில் உள்ள குப்பை கிடங்கை கலெக்டர் முருகன் ஹரி நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் அருணா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, அவர் பேசியதாவது:

குப்பை கிடங்கில் மக்கும், மக்காத குப்பை என தனித்தனியாக பிரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. குப்பைகளை பிரிக்க தேவையான இயந்திரங்கள் உள்ளதா? அல்லது இயந்திரங்கள் கூடுதலாக தேவைப்படுகிறதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். தற்போது வரை தேவையான இயந்திரங்கள் உள்ளது. கூடுதலாக இயந்திரங்கள் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர். மாநகராட்சி ஆணையரிடம் ஆலோசனை நடத்திய பிறகு மிக விரைவில் கூடுதலாக இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சி ஆணையர் அருணா கூறியதாவது:

நாள் ஒன்றுக்கு 35 மெட்ரிக் டன் குப்பைகள் சித்தூர் மாநகரம் முழுவதும் சேகரித்து இங்கு கொட்டப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 25 மெட்ரிக் டன் வரை குப்பைகளை பிரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பையில் இருந்து வர்மிகேம்பஸ் உரத்தை தயாரித்து வருகிறோம். இந்த உரத்தை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளோம்.

விரைவில் விவசாயிகளுக்கு வர்மிகேம்ப்ஸ் உரம் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் வர்மிகேம்பஸ் உரம் பயன்படுத்தி வருகிறோம். கூடுதலாக வர்மிகேம்பஸ்  உரம் தயாரிக்க நடவடிக்கைக எடுக்கப்பட்டு வருகிறது. மக்கும் மற்றும் மக்கா குப்பை என தனித்தனியாக பிரிக்க நடவடிக்கை முழு வீச்சில் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது சுகாதார துறை அதிகாரி அணில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: