காதலனை கொன்ற கிரீஷ்மாவை காவலில் எடுக்க போலீசார் முடிவு

திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன் கொலை வழக்கில் அவரது காதலியும், கல்லூரி மாணவியுமான கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நெடுமங்காடு காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற கிரீஷ்மா தற்போதுவரை மருத்துவமனையில் தான் உள்ளார். இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்து உள்ளனர். நீதிமன்றம் இதற்கு அனுமதித்தால் மருத்துவமனையில் இருந்தே கிரீஷ்மாவை காவலில் எடுத்து போலீசார் விசாரிப்பார்கள்.

மேலும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவரது தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். 3 பேரையும் ஒன்றாக ராமவர்மன்சிறையில் உள்ள வீட்டுக்கு கொண்டு சென்று விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே வழக்கை கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஷாரோனுக்கு விஷம் கொடுத்தது கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன்சிறை ஆகும். ஆகவே கேரள போலீசாரால் தொடர்ந்து வழக்கை விசாரிக்க முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கேரள உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் வழக்கை கேரளாவில் தொடர்ந்து நடத்த முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறினர். தொடர்ந்து வழக்கை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரி மாணவி கிரீஷ்மா, தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி முடித்த பிறகு, வழக்கு தமிழக போலீசிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு குமரி மாவட்ட போலீசார் தொடர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories: