கோயில் குளங்கள் புறம்போக்கு என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?: அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கோயில் குளங்கள் புறம்போக்கு என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், ஆலக்குடியைச் சேர்ந்த செல்வராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான குளங்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த குளங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘கோயில் குளங்கள் வருவாய்த்துறை ஆவணங்களில் புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வகை மாற்றம் ெசய்து மேல் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘கோயிலுக்கு சொந்தமான குளங்கள் ஏன் அரசு புறம்போக்கு என மாற்றப்பட்டது’’ என்றனர். மேலும், ‘‘தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான குளங்கள் அரசு புறம்போக்கு என வகைமாற்றம் ெசய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த விபரங்களை, வருவாய்த்துறை மற்றும் அறநிலையத் துறை தரப்பில் அறிக்கையளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: