சுங்க அதிகாரிகளிடம் சிக்காமல் ரூ.3.5 கோடி தங்கத்துடன் தப்பிய 2 பெண்கள் கைது

திருமலை: சார்ஜாவில் இருந்து விஜயவாடாவிற்கு பேஸ்ட் வடிவில் கடத்திய ரூ.3.5 கோடி மதிப்புள்ள தங்கத்துடன் தப்பிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விஜயவாடா விமான நிலையத்திற்கு நேற்று சார்ஜாவில் இருந்து பயணிகளுடன் ஒரு விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை நடத்தினர். சோதனை முடிந்து பயணிகள் புறப்பட்டு சென்றனர். இதேபோல் 2 பெண்களும் சோதனைக்கு பிறகு விமான நிலையத்திற்கு வெளியே வந்து காரில் ஏறி ஐதராபாத் நோக்கி சென்றனர்.

இந்த பெண்கள் தங்கத்தை பேஸ்ட் போல் மாற்றி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்கள் செல்லும் செக்போஸ்ட்களில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து கண்காணிக்கும்படி கூறினர். அதன்படி யாதாத்ரி புவனகிரி மாவட்டம் பந்தங்கி சுங்கச்சாவடியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தினர். காரில் இருந்த 2 பெண்களிடம் சோதனை செய்தபோது அவர்கள், பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து 2பெண்கள் மற்றும் கார் டிரைவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ரூ.3.5 கோடி மதிப்பிலா தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்பியது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும்  பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை டிஆர்ஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: