ஆசிரியர் பணி முறைகேடு விவகாரம்: தயவுசெய்து என்னை வாழ விடுங்கள்: மேற்குவங்க மாஜி அமைச்சர் கதறல்

கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் கைதான பார்த்தா சட்டர்ஜி, தயவு செய்து என்னை வாழ விடுங்கள் எனக் கோரி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, அம்மாநில ஆசிரியர், ஊழியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து அவர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் வீட்டில் பல கோடி மதிப்புள்ள ரொக்கம், நகைகள், தங்க கட்டிகள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வழக்கில் முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி மற்றும் ஐந்து முன்னாள் எஸ்எஸ்சி அதிகாரிகள் ஆகியோர் சிறையில் உள்ளனர். இந்நிலையில் ஜாமீன் கோரி பார்த்தா சட்டர்ஜி தரப்பில் கொல்கத்தா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எனக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. என் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. தயவுசெய்து என்னை வாழ விடுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த கொல்கத்தா சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பார்த்தா சட்டர்ஜியின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து நீதிமன்ற காவலை வரும் 14 வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Related Stories: