சிபிஐ.க்கு பொது அனுமதி, தெலங்கானா அரசு ரத்து; 2 மாதத்துக்கு முன்பே சத்தமின்றி நடந்தது

ஐதராபாத்:  யாருடைய அனுமதியும் இன்றி தனது மாநிலத்தில் நுழைந்து சிபிஐ விசாரணை நடத்துவதற்காக அளித்து இருந்த பொது அனுமதியை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று அதிரடியாக ரத்து செய்தார். டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு  சட்டம் 1946, பிரிவு 6ன் கீழ்,  சிபிஐ உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளும் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் சென்று விசாரணை நடத்த, அந்த மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும். இதற்கான பொது அனுமதியை பல்வேறு மாநில அரசுகள் அளித்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள், இந்த அனுமதியை அளிக்க மறுத்துள்ளன. எனவே, இந்த மாநிலங்களில் முன் அனுமதி பெறாமல் சிபிஐ சென்று விசாரணை நடத்த முடியாது. மேற்கு வங்கம், சட்டீஸ்கர், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட  8 மாநிலங்கள் ஏற்கனவே இந்த பொது அனுமதியை  ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், பாஜ.வுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் தெலங்கானா அரசும்,  சிபிஐ.க்கு பொது அனுமதியை வழங்கி இருந்தது. தற்போது, முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் பாஜ.வுக்கும் இடையே கடுமையாக மோதல் நடந்து வருகிறது. இதன் காரணமாக, சிபிஐ வழங்கப்பட்டு இருந்த பொது அனுமதியை சந்திரசேகர ராவ் ரத்து செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்று முன்தினம்தான் இந்த தகவல் வெளியே தெரியவந்துள்ளது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் 4 எம்எல்ஏ.க்களை தனது கட்சிக்கு இழுக்க பாஜ சார்பில் பேரம் பேசியதாக 3 பேரை சமீபத்தில் தெலங்கானா போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடும்படி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பாஜ வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம்  நீதிமன்றத்தில் விவாதம் நடந்தது. அப்போது, தெலங்கானா அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சிபிஐ.க்கு வழங்கப்பட்ட பொது அனுமதி ரத்து செய்யப்பட்ட தகவலை  தெரிவித்தார்.

Related Stories: