அசம்கானிடம் இருந்து எம்எல்ஏ பதவி பறிப்பு

லக்னோ: வெறுப்புப் பேச்சு வழக்கில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அசம் கானுக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கானுக்கு ராம்பூர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் விதிமுறை உள்ளது. இதன்படி, வெறுப்பு பேச்சு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அசம்கானை உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் இருந்து தகுதிநீக்கம் செய்து சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் பிரதீப் துபே நேற்று உத்தரவிட்டார். மேலும், அசம்கானின் ராம்பூர் சதார் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: