கோவையில் 31ம் தேதி பந்த்துக்கு பாஜ அழைப்பு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு: மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை என அண்ணாமலை பல்டி

சென்னை: கோவையில் வருகிற 31ம் தேதி பந்த் நடத்தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில் மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருக்கலாம் என்று அண்ணாமலை பல்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக  தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜ சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்புக்கு தடை விதிக்க கோரி கோவையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், பாஜ நடத்த உள்ள பந்த்துக்கு அனுமதி பெறவில்லை. இதனால், சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும். பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படும். எனவே, இந்த முழு அடைப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ், எந்த வகையான போராட்டமாக இருந்தாலும் காவல்துறை அனுமதி அவசியம். ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி வாங்கியதாக தெரியவில்லை. எனவே, பாஜ அறிவித்துள்ள பந்த்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, இந்த பந்த் நடத்த மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை. கட்சியின் மாவட்ட நிர்வாகத்தினரால் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பந்த் நடத்துவதா அல்லது வேறு வகையான போராட்டம் நடத்துவதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும், மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருக்கலாம். அதனை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தார். அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இடைக்கால உத்தரவு எதுவும் கோரவில்லை என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் சட்டப்படியான நடவடிக்கையை காவல்துறை எடுக்கலாம்  என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: