திருப்பதி கொர்லகுண்டாவில் சாலை விரிவாக்க பணிகளை மேயர் ஆய்வு

திருப்பதி : திருப்பதி கொர்லகுண்டாவில் சாலை விரிவாக்க  பணிகளை மேயர் சிரிஷா நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பதி கொர்லகுண்டா மெயின் ரோடு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மேயர் சிரிஷா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

கொர்லகுண்டா மாருதி நகர் பிரதான சாலை விரிவாக்க பணி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 700 மீட்டர் நீளம், 40 அடி அகலத்தில் தீர்மாணிக்கப்படும் இந்த வீதியால் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து பிரச்னைகளில் இருந்து விடுபடுவார்கள். சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள 193 வீடுகளை கண்டறிந்து சாலையை அகலப்படுத்தும் பணியில் 60க்கும் மேற்பட்டோருக்கு டிடிஆர் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 50 பேருக்கு டிடிஆர் பத்திரம் வழங்க தயாராக உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இழப்பீட்டு தொகையின்கீழ் வழங்கப்படும் டிடிஆர் பத்திரங்கள் விரைவாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. கட்டிடங்கள் அகற்றப்பட்டவுடன் திருப்பதி நகரின் முன்மாதிரி சாலையாக இச்சாலை உருவாக்கப்படும். 1 கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் மற்றும் வடிகால்களுக்கான கொர்லகுண்டா மாஸ்டர் பிளானுக்கு கவுன்சில் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.

மாநகராட்சி துணை மேயர் அபிநய் ரெட்டி   கொர்லகுண்டா மெயின் ரோட்டை 40 அடி அகலப்படுத்தினால் மக்கள் பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுபடுவதுடன், சிறிய ஆம்புலன்ஸ் வர முடியாத சூழ்நிலையில் இருந்து பல வாகனங்கள் செல்ல வழிவகை ஏற்படும். இன்னும் 3 மாதங்களில் இந்த சாலையை மக்கள் பயன்படுத்தும் வகையில் மக்களும் அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார். ஆய்வின்போது கமிஷனர் அனுபமா அஞ்சலி, துணை மேயர் அபிநயரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: