திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்திபெற்ற கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

6 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம் வரும் 30ம் தேதியும், திருக்கல்யாண வைபவம் மறுநாள் 31ம் தேதியும் நடக்கிறது. சூரசம்ஹாரத்தை காண தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமிலிருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. மேலும் விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக தற்காலிக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சுகாதார கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ முகாம், அன்னதானக் கூடம் உள்ளிட்ட பக்தர்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை திருச்செந்தூருக்கு வருகைதந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

Related Stories: