டி20 உலக கோப்பை ஜிம்பாப்வேயுடன் மோதல் தென் ஆப்பிரிக்காவின் வெற்றியை பறித்த மழை! இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி

ஹோபர்ட்: டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் 6வது லீக் போட்டியில் நேற்று தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. இப்போட்டி துவங்குவதற்கு முன்பு, போட்டி நடைபெறும் ஹோபர்ட் மைதானத்தில் மழை பெய்தது. இதனால், 9 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணியில் முதல் நான்கு பேரும் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்தனர். இதனைத் தொடர்ந்து வெஸ்லி 35 (18), மில்டன் 18 (20) ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்ததால், ஜிம்பாப்வே அணி 9 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களை குவித்தது.

அதன்பின்னர் தொடர்ந்து மழை அச்சுறுத்தல் இருந்ததால், தென் ஆப்பிரிக்க அணி 7 ஓவர்களில் 64 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் ஓபனர் குவின்டன் டி காக் அதிரடியாக ஆடினார். அவர் 18 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 47 ரன்களை குவித்து அசத்தினார். பவுமா 2 பந்துகளில் இரண்டு ரன்களை அடித்திருந்தார். இதனால், தென்னாப்பிரிக்க அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை குவித்து அசத்தியது. மேலும், கடைசி 6 ஓவர்களுக்கு 29 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த நேரத்தில் மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் மைதானம் கடுமையாக வழுக்கியது.

பந்துவீச மிகவும் சிரமம் ஏற்பட்டது. ஒரு பந்துவீச்சாளர் வழுக்கி விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து  ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. வெற்றிபெற வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் தென்னாப்பிரிக்கா தோற்றது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

தென்னாப்பிரிக்க அணி இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை வென்றது கிடையாது. அணியில் திறமையான வீரர்கள் இருந்தும், மழை காரணமாக அந்த அணி ஐசிசி கோப்பை தொடர்களில் பலமுறை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: