ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி

ஐதராபாத்: ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி பெற்றது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இணைந்து ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். அபிஷேக் 12 ரன் எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஜுரெல் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த அன்மோல்பிரீத் 5 ரன் எடுத்து சந்தீப் ஷர்மா வேகத்தில் ஜெய்ஸ்வால் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஐதராபாத் 5.1 ஓவரில் 35 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ஹெட் ரெட்டி ஜோடி உறுதியுடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. ஹெட் 39 பந்தில் அரை சதம் அடித்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தனர். ஹெட் 57 ரன் (44 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து நிதிஷ் குமாருடன் ஹென்ரிக் கிளாஸன் ஜோடி சேர்ந்தார். 30 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்த ரெட்டி அதன் பிறகு டாப் கியரில் அட்ச்சி தூக்க! சன்ரைசர்ஸ் ஸ்கோர் 150 ரன்னை தாண்டியது.

மறு முனையில் கிளாஸனும் தன் பங்குக்கு பவுண்டரி, சிக்சர்களைப் பறக்கவிட்டு மிரட்டினார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. நிதிஷ் குமார் ரெட்டி 76 ரன் (42 பந்து, 3 பவுண்டரி, 8 சிக்சர்), கிளாஸன் 42 ரன்னுடன் (19 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணிக்கு கடைசி 5 ஓவரில் 70 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது.

முதல் ஓவரை வீசிய புவனேவஸ்வர் குமார், தொடக்க வீரர் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன் இருவரையும் டக் அவுட் செய்து அசத்தினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரியான் பராக், ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி 3வது விக்கெட்டுக்கு 134 ரன் சேர்த்தனர். 30 பந்தில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் (67 ரன், 40 பந்து) நடராஜன் வேகத்திலும், 31 பந்தில் அரைசதம் அடித்த பராக் (77 ரன், 49 பந்து) கம்மின்ஸ் பந்திலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹெட்மயர் (13) விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்தி சன்ரைசர்சுக்கு நம்பிக்கை தந்தார்.

துருவ் ஜூரல் (1) கம்மின்ஸ் பந்தில் வெளியேற, கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஸ்வர் குமார் வீசிய பரபரப்பான அந்த ஓவரின் முதல் பந்தில் அஷ்வின் 1 ரன் எடுத்தார். 2வது பந்தை எதிர்கொண்ட ரோவ்மன் பாவல் 2 ரன்னும், 3வது பந்தில் பவுண்டரியும், 4 மற்றும் 5 பந்துகளில் தலா 2 ரன்னும் எடுக்க ஆட்டத்தில் பிரஷர் எகிறியது. கடைசி பந்து ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்னே தேவை என்ற நிலையில் புவனேஸ்வர் வீசிய புல்டாஸ் பந்தில் பாவல் (27 ரன், 15 பந்து) எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுக்க, 1 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3, நடராஜன், கம்மின்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 போட்டியில் 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியது.

The post ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: