திருவண்ணாமலையில் இளையோர் தடகளம் சாம்பியன் பட்டம் வென்றது சென்னை அணி

சென்னை : திருவண்ணாமலையில் நடந்த மாநில 36வது இளையோர்  தடகளப் போட்டியில், சென்னை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

திருவண்ணாமலை மாவட்ட தடகளச் சங்கம்,  அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை ஒருங்கிணைந்து நடத்திய இந்தப்போட்டியை, விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

போட்டியில் 36 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் தடகள வீரர்கள் கலந்துகொண்டனர். அதில், 14 வயது, 16 வயது, 18 வயது மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு  ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உட்பட பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் பிரிவில் 64 போட்டிகளும், பெண்கள் பிரிவில் 62 போட்டிகளும் நடந்தது. அதில் 376 புள்ளிகளை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, சென்னை மாவட்ட தடகளச் சங்க அணி வென்றது. அதேபோல், கோவை மாவட்ட தடகள சங்க அணி 220 புள்ளிகளை பெற்று 2ம் இடத்தை பெற்றது. மேலும், ஆண்கள் பிரிவில் 199 புள்ளிகளை பெற்று சென்னை மாவட்ட தடகளச்சங்க அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை மாடட்ட அணி 95 புள்ளிகளை பெற்று 2ம் இடத்தை பெற்றது. அதேபோல், பெண்கள் பிரிவில் சென்னை மாவட்ட தடகளச்சங்க அணி 177 புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், கோவை மாவட்ட அணி 125 புள்ளிகளை பெற்று 2வது இடத்தையும் வென்றது. இந்நிலையில், நிறைவு விழாவில்  சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் உள்ளிட்ட பதக்கங்களை வழங்கி பேசினார்.

Related Stories: