காலை 11 மணிக்குள் ராஜினாமா செய்யுங்கள்; 9 துணை வேந்தர்களுக்கு கெடு: கேரள ஆளுநர் அதிரடி

திருவனந்தபுரம்: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) விதிகளை மீறி நியமிக்கப்பட்ட கேரளாவிலுள்ள 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இன்று காலை 11 மணிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் கேரளா, கண்ணூர், மகாத்மா காந்தி, காலடி சமஸ்கிருதம், அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இன்று காலை 11 மணிக்குள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் விதிகளை மீறி நியமிக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கவர்னருக்கு பல புகார்கள் சென்றன.  அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தரை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ததை தொடர்ந்து கவர்னர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 9 பல்கலைக்கழக துணைவேந்தர்களையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ள கவர்னரின் இந்த நடவடிக்கை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: