டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி: விராத் கோஹ்லி அபார ஆட்டம்

மெல்போர்ன்: பாகிஸ்தான் அணியுடனான உலக கோப்பை டி20 சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. அதிரடியாக விளையாடிய கோஹ்லி 82* ரன் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார். மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ரிஸ்வான், கேப்டன் பாபர் இருவரும் பாக். இன்னிங்சை தொடங்கினர்.

அர்ஷ்தீப் வேகத்தில் பாபர் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, ரிஸ்வான் 4 ரன் எடுத்து புவனேஷ்வரிடம் பிடிபட்டார். பாகிஸ்தான் 4 ஓவரில் 15 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ஷான் மசூத் - இப்திகார் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்தனர். இப்திகார் 51 ரன் (34 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஷமி வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஷதாப் 5, ஹைதர் 2, நவாஸ் 9 ரன் எடுத்து ஹர்திக் பந்துவீச்சில் பலியாகினர். ஆசிப் 2 ரன்னில் வெளியேறினார். ஷாகீன் 16 ரன் எடுத்து (8 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) புவி பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார். பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. ஷான் மசூத் 52 ரன் (42 பந்து, 5 பவுண்டரி), ஹரிஸ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஹர்திக் தலா 3, புவனேஷ்வர், ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அக்சர் படேல் வீசிய ஒரு ஓவரில் 21 ரன் வாரி வழங்கி ஏமாற்றமளித்தார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 6.1 ஓவரில் 31 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. தொடக்க வீரர்கள் ராகுல், ரோகித் தலா 4 ரன்னில் வெளியேற, சூரியகுமார் 15 ரன், அக்சர் 2 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்த நிலையில், கோஹ்லி - ஹர்திக் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இருவரும் 5வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்து அசத்தினர். பரபரப்பான கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் ஹர்திக் (40 ரன், 37 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), 5வது பந்தில் கார்த்திக் (1) ஆட்டமிழந்தனர். எனினும், கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. கோஹ்லி 82 ரன் (53 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), அஷ்வின் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: