‘மனவலிமையே என்னுடைய சாதனைகளுக்கு காரணம்’: நோவாக் ஜோகோவிச் பேட்டி

பெல்கிரேட்: ‘டென்னிஸ் விளையாட்டை எனது வாழ்க்கையாக தேர்வு செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன். டென்னிசில் என்னுடைய சாதனைகளுக்கு காரணம் எனது அசாதாரணமான மனவலிமைதான்’ என்று செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் கடைசி டென்னிஸ் போட்டியான ஏடிபி பைனல்ஸ், இத்தாலியின் நிட்டோ நகரில் வரும் நவ.13 முதல் நவ.20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஏடிபி தரவரிசையில் உள்ள முதல் 10 வீரர்களில் 8 பேர் மட்டுமே போட்டியிட உள்ளனர்.

நோவாக் ஜோகோவிச், ஏடிபி தரவரிசையில் தற்போது முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், 2ம் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் மற்றும் நார்வேயின் இளம் டென்னிஸ் வீரர் காஸ்பர் ரூட் ஆகியோர் இதில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டனர். இப்போட்டிக்காக தற்போது நோவாக் ஜோகோவிச் பெல்கிரேடில் தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். நேற்றைய பயிற்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘90ம் ஆண்டுகளில் எங்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்தது. உணவுக்கே வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் டென்னிஸ் விளையாட்டை நான் எனது வாழ்க்கையாக தேர்வு செய்தது, மிகவும் அதிர்ஷ்டமான ஒன்று. வறுமையில் இருந்த நிலையிலும் என்னுடைய பெற்றோர், என்னை உற்சாகப்படுத்தி டென்னிஸ் பயிற்சிகளுக்கு அனுப்பி வைத்தனர். அந்த சூழ்நிலையில் அவர்களால் அது முடியாத ஒன்று. கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நான் டென்னிசில் சிறந்த வீரராக உருவானதற்கும், என்னுடைய சாதனைகளுக்கும் காரணம் எனது அசாதாரணமான மனவலிமைதான். ஏனெனில் டென்னிஸ் விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்று கிடையாது. உடல் திறனுடன், நல்ல மனவலிமையும் அதற்கு தேவை’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: