சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டம் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி

சிட்னி: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று முதல் பிரிவு லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மண்ணைக் கவ்வியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், பரபரப்பான சூப்பர் 12 சுற்று நேற்று தொடங்கியது. இந்த சுற்றின் முதல் பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதியது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஃபின் ஆலன், டிவோன் கான்வே இருவரும் நியூசிலாந்து இன்னிங்சை தொடங்கினர்.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4 ஓவரில் 56 ரன் சேர்த்தது. பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ஆஸி. பந்துவீச்சை சிதறடித்த ஆலன் 42 ரன் (16 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஹேசல்வுட் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, கான்வே 36 பந்தில் அரை சதம் அடித்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்தனர். வில்லியம்சன் 23 ரன்னில் வெளியேற, கிளென் பிலிப்ஸ் 12 ரன் எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்ட ஓவர்களில் கான்வே - ஜேம்ஸ் நீஷம் ஜோடி அதிரடியில் இறங்க, நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன் குவித்தது. கான்வே 92 ரன் (58 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), நீஷம் 26 ரன்னுடன் (13 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. தரப்பில் ஹேசல்வுட் 2, ஸம்பா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 17.1 ஓவரில் 111 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கிளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 28 ரன், கம்மின்ஸ் 21, மிட்செல் மார்ஷ் 16, கேப்டன் பிஞ்ச் 13, டிம் டேவிட் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ, சான்ட்னர் தலா 3, போல்ட் 2, பெர்குசன், சோதி தலா 1 விக்கெட் கைப்பற்றினர். கான்வே ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து 2 புள்ளிகள் பெற்றது. நியூசிலாந்து அணி 2011ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியனான ஆஸி. அணி சூப்பர் 12 சுற்றின் தொடக்க லீக் ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: