தஞ்சை அருகே சோழர் கால கல்வெட்டு, சிற்பங்கள் கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை அருகே முதலாம் குலோத்துங்க சோழன் காலமான கி.பி.1213ம் நூற்றாண்டு கல்வெட்டு, சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டத்துக்குட்பட்ட காமதேவமங்கலத்தில் உள்ள அய்யனார் கோயில் வளாகத்தில் கல்வெட்டுகளும், இக்கோயிலுக்கு அருகாமையில் உள்ள வயல்வெளியில் சில சிற்பங்களும் இருப்பதாக அப்பகுதியினர் தகவல் அளித்தனர்.

இதையடுத்து மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கண்ணதாசன், பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்  தில்லை கோவிந்தராஜன், உக்கடை அப்பாவுதேவர் மேல் நிலைப்பள்ளி முதுநிலை வரலாற்று ஆசிரியர் சின்னையன், கல்லூரி மாணவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:  கி.பி.1213 ம் நூற்றாண்டு எழுத்து கொண்ட இரண்டு துண்டு கல்வெட்டுகளில் முதலாவதில் திருமாது புவி, குலோத்துங்க, மூன்று மா என்ற சொற்கள் காணப்படுகின்றன. திருமாது புவி என்னும் சொல் இரண்டாம் ராஜேந்திரனின் மெய்கீர்த்தியின் தொடக்க வரி என்றும், இரண்டாவது கல்வெட்டில் அரசனின் ஆட்சியாண்டு 42வதை குறிப்பதுடன் ஏரியூர் நாடு என நாட்டு பெயரும், வேம்பன், குலோத்துங்கன் என்ற பெயர்களுடன், இது செய்யக் கடவ செய்து கல்வெட்டினது வேளானும் என்ற தொடரும் காணப்படுகிறது.

சோழ அரசர்களில் நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் முதலாம் குலோத்துங்க சோழன் என்பதால் இக்கல்வெட்டு அவர் காலத்தை சேர்ந்ததாகும். இங்கு காணும் சிற்பங்களில் துவார பாலகர் சிற்பம் இடதுகாலை ஊன்றி வலதுகாலை கதை என்னும் ஆயுதத்தின் மீது வைத்தும், கைகள் உடைந்த நிலையில் உள்ளது.

சிவனின் தாண்டவ சிற்பம் இருகால்களை சதுர வடிவமாகக் கொண்டும், வலது முன்கை உடைந்தும், இடது முன்கை மார்புக்குக் குறுக்காகவும், வலது பின்கை முற்றிலும் உடைந்தும், இடது பின்கை மான் ஏந்தியும் காணப்படுவதுடன் இவற்றின் அருகாமையில் லிங்கம் ஒன்று காணப்படுகிறது.

இவ்வூர் குறித்து தஞ்சாவூர் பெரிய கோயில் கல்வெட்டில், பாண்டிய குலாசனி வளநாட்டு புறக்கிளியூர் நாட்டு காமதேவமங்கலம் என்றும், இவ்வூரை சேர்ந்த காஞ்சன் கொண்டையன் என்பவன் முதலாம் ராஜராஜனின் பணி மகனாக புரவரித்திணை களத்து வரிப்புத்தக நாயகனாக இருந்ததையும், இவன் பெரிய கோயில் பிரகாரத்து பிள்ளையாருக்கு வெள்ளித்தளிகை ஒன்று வழங்கியதையும், முதலாம் ராஜேந்திரன் காலத்திலும் இப்பதவியினை வகித்து வந்தார் என திருவாலங்காட்டு செப்பேட்டிலும் காணமுடிகிறது என தெரிவித்தனர்.

Related Stories: