தீபாவளியையொட்டி களை கட்டியது: கொங்கணாபுரம், வடலூர் சந்தையில் 12.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரத்தில் சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு பொங்கல், தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடை பெறும். இந்நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று கூடிய சந்தைக்கு 12 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. புரட்டாசி மாதத்தையொட்டி கடந்த 4 வாரங்களாக சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக இருந்த நிலையில் இன்று சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அதிகமாக ஆடுகளை கொண்டு வந்திருந்தனர்.

இதில் 10 கிலோ எடை உள்ள வெள்ளாடு ரூ.5400 முதல் ரூ.6500 வரை, 10 கிலோ எடை உள்ள கிடாய் ரூ.7000 முதல் ரூ.8000 வரை, 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ. 11000 முதல் ரூ.12000 வரை, வளர்ப்பு குட்டி ஆடு ரூ.3000 முதல் ரூ.3500 வரை விலை போனது. இவை தவிர 1200 பந்தய சேவல், கோழிகள் விற்பனைக்கு குவிந்தது. பந்தய சேவல் ரூ.1000 முதல் ரூ.4000 வரையும், கோழி ரூ.100 முதல் ரூ.1000 வரையும் விற்கப்பட்டது. மேலும் 130 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டது. சந்தையில் இன்று ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வடலூர்: வடலூரில் சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். தீபாவளியையொட்டி இன்று நடைபெற்ற சந்தையில் ரூ.2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகின. சமயபுரம் திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தைக்கு லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தைக்கு  1000க்கும் மேற்பட்ட ஆடுகள் குவிந்தன. ஆடுகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20,000 வரை விற்கப்பட்டது. ரூ.50லட்சம் வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.

Related Stories: