தீபாவளி பண்டிகையையொட்டி திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திருமங்கலம்: தென் தமிழகத்தின் மிகப்பெரிய ஆட்டுச்சந்தை மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச்சந்தையாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் திருமங்கலம் சந்தைபேட்டையில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி, பொங்கல், ரம்ஜான் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் ஆடுகள் விற்பனையில் சந்தை களைகட்டும். தீபாவளிக்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்று நடைபெற்ற தீபாவளி ஸ்பெஷல் ஆட்டுச்சந்தையில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதிகாலை 4.30 மணி முதல் காலை 11 மணி வரை ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஆடுகளை வாங்க மதுரை மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

தீபாவளியையொட்டி ஆடுகள் விலையும் வழக்கத்தைவிட உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக சந்தையில் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும் ஆடுகள் தீபாவளியையொட்டி ரூ.5 ஆயிரம் விலை உயர்ந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக  ரூ.25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையாகின. தீபாவளிக்கு முதல்நாளான ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ஆட்டுச்சந்தை திருமங்கலத்தில் நடைபெறும் என்பது சிறப்பு அம்சமாகும்.

Related Stories: