மீண்டும் உக்கிரமடையும் போர்; இந்தியர்கள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும்: தூதரகம் எச்சரிக்கை

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் துவங்கி, 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் வலிமை வாய்ந்த படைகளை எதிர்கொண்டு, சளைக்காமல் உக்ரைன் ராணுவமும் எதிர் தாக்குதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ரஷ்யா ஆக்கிரமித்திருந்த சில பகுதிகளை மீட்டுள்ளோம் என்று 20 நாட்களுக்கு முன்னர் உக்ரைன் அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களில் சரமாரியாக ஏவுகணைகளை வீசி, மீண்டும் போரை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரியில் ரஷ்யா இந்த போரை துவக்கியதும், உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அவசர அவசரமாக நாடு திரும்பினர்.

மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர், ருமேனியா வழியாக இந்தியா வந்து சேர்ந்தனர். இடையே ஆகஸ்ட் துவக்கத்தில் ரஷ்யாவின் தாக்குதல் சற்று குறைந்ததும், உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மீண்டும் சகஜமான வாழ்க்கைக்கு திரும்பினர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்திருந்த மருத்துவ மாணவர்களில் 300க்கும் மேற்பட்டோர், மீண்டும் உக்ரைனுக்கு சென்றனர். ஆனால் தற்போது ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. கெர்சன் நகரில் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் தற்போது வெளியேறி வருகின்றன. இதனால் கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்யா, மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த 2 நாட்களாக ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது, சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி, தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் கெர்சன் மற்றும் கீவ் நகரங்களில் ரஷ்ய ராணுவத்தினர் 21 ட்ரோன்களை பயன்படுத்தி, வெடி குண்டுகளை வீசியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ‘ரஷ்ய ராணுவத்தினர் ட்ரோன்கள் மூலம் மின் நிலையங்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இதனால் கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்படும்.

இனிமேல் பகல் நேரங்களில் மட்டுமே இந்த நகரங்களில் மின் விநியோகம் இருக்கும். மேலும் பாதுகாப்பு கருதி, இரவு நேரங்களில் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளது. இந்த போர் துவங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனில் 29,916 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 53,616 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட இருமடங்கு இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும் 1.5 கோடி போர் காரணமாக உக்ரைனில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதல் மேலும் மேலும் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்கள், மாணவர்கள் என அனைவரும் கிடைத்த வழிகளை பயன்படுத்தி உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேற்று தங்களது ட்விட்டர் பதிவு மூலம் விடுத்துள்ள செய்தியில், ‘உக்ரைனில் உள்ள இந்தியர்கள் கிடைக்கும் அத்தனை வழிகளையும் பயன்படுத்தி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மட்டுமே மக்கள் பயணம் செய்ய வேண்டும். அதை விடுத்து தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். உக்ரைனில் உள்ள இந்திய மக்களின் பாதுகாப்பு குறித்து ரஷ்யா மற்றும் உக்ரைன் அரசுகளிடம் ஒன்றிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது’ என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: