ஜோசப், ஹோல்டர் வேகத்தில் சரிந்தது ஜிம்பாப்வே வெஸ்ட் இண்டீசுக்கு முதல் வெற்றி: ‘சூப்பர் 12’ வாய்ப்பை தக்கவைத்தது

ஹோபர்ட்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் முதல் சுற்று பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியை 31 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது. பெல்லரீவ் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் அதிகபட்சமாக 45 ரன் (36 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். பாவெல் 20, அகீல் உசேன் 23*, எவின் லூயிஸ் 15, கைல் மேயர்ஸ் 13 ரன் எடுத்தனர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் சிக்கந்தர் ராசா 3, முசரபானி 2, வில்லியம்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 18.2 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. லூக் ஜாங்வி 29, வெஸ்லி 27, ரயன் பர்ல் 17, சிக்கந்தர் 14, கேப்டன் சகாப்வா 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 4 ஓவரில் 16 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஹோல்டர் 3.2 ஓவரில் 12 ரன்னுக்கு 3 விக்கெட், அகீல், மெக்காய், ஓடியன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ், சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்தது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள 4 அணிகளுமே தலா 1 வெற்றி, 1 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகிப்பதால், கடைசி லீக் ஆட்டங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories: