14 ஆண்டு கனவு நனவானது பாகிஸ்தான் எல்லையில் புதிய விமானப்படை தளம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

காந்திநகர்: பாகிஸ்தான் எல்லையில் புதிதாக அமைய உள்ள விமான தளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குஜராத்தின் காந்திநகரில், பாதுகாப்புத்துறை கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீசா என்ற இடத்தில் அமையும்  விமான படை தளத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ‘இது புதிய இந்தியாவின் துவக்கமாக அமைந்துள்ளது. இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்ற கண்காட்சியாகவும், அதில், இந்தியாவில் மட்டும் தயாரான தளவாடங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. இந்தியா- பாக். எல்லையில் அமையும் தீசா விமான படை தளம், நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியமான மையமாக இருக்கும்.

கடந்த 2000ம் ஆண்டு நான் முதல்வராக இருந்த போது தீசா விமான தளத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. விமான தளத்துக்கான முக்கியத்துவம் குறித்து ஒன்றிய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 14 ஆண்டுகள் எதுவும் நடக்கவில்லை. ஒன்றியத்தில் பாஜ அரசு அமைந்த உடன் நடவடிக்கைகள் துவங்கப்பட்டு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து 101 பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து அந்த பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடும். 411 பாதுகாப்பு சார்ந்த பொருட்கள் இந்தியாவிலேயே கொள்முதல் செய்யப்படும். நாடு வெகுதூரம் சென்றுவிட்டது. முன்பு புறாக்களை விடுவித்த நாம், தற்போது சிறுத்தைகளை விடுவிக்கிறோம்’ என்றார்.

* வாலை நறுக்க அதிரடி

வட மேற்கு பிராந்தியத்தில் ராஜஸ்தானில் உள்ள பரோடி, குஜராத்தின் புஜ், நாளியா ஆகிய இடங்களில் விமான தளங்கள் உள்ளன. விமான தளம் அமைய உள்ள தீசா பாக். எல்லையில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்,பாவ் நகர் மற்றும் வதோதராவில் பெரிய,பெரிய தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மிர்பூர் காஸ்,ஐதராபாத் போன்ற இடங்களில் எப்.16 போர் விமானங்களை அந்த நாடு நிறுத்தி உள்ளது.  எனவே, குஜராத் தொழிற்சாலை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும். அதை தடுக்கவும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உடனடியாக பதிலடி கொடுக்கவும் தீசாவில் புதிய தளம் அமைக்கப்பட உள்ளது. தீசாவில் விமான தளம் செயல்படும்போது பாகிஸ்தானின் ஐதராபாத், கராச்சி, சுக்கூர் போன்ற நகரங்களை இந்திய விமானங்கள் எளிதில் தாக்கி அழிக்க முடியும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.

Related Stories: