எடப்பாடி கைதை கண்டித்து அதிமுகவினர் சாலைமறியல்: திருவொற்றியூரில் 81 பேர் கைது

திருவொற்றியூர்: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை தடையை மீறி உண்ணாவிரதம் போராட்டம் நடத்திய எடப்பாடி உள்பட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து, திருவொற்றியூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 81 அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக, தனது ஆதரவாளரான ஆர்.பி.உதயகுமாருக்கு அப்பதவியை வழங்க கோரி சபாநாயகரிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் கொடுத்திருந்தார். எனினும், சட்டப் பேரவை விதிகளின்படி எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியே கிடையாது என நேற்றைய பேரவையில் சபாநாயகர் அப்பாவு தகுந்த ஆதாரங்களுடன் அறிவித்தார்.

இதைக் கண்டித்து, இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போலீசாரின் தடையை மீறி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், ஆதரவு எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி உள்பட ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைத்தனர். அங்கு அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர் அப்பாவுவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, இன்று காலை திருவொற்றியூர், தேரடி வீதியில் கவுன்சிலர் கே.கார்த்திக் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் வேலாயுதம், ஜோசப், காஞ்சி சித்ரா உள்பட 81 பேர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் காதர் மீரான் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர் கார்த்திக் உள்பட 81 அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: