ஐசிசி உலக கோப்பை டி20 ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது இலங்கை

ஜீலாங்: உலக கோப்பை டி20 தொடரின் முதல் சுற்று ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 79 ரன் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அணியை வீழ்த்தியது. விக்டோரியா, சவுத் ஜீலாங் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற அமீரகம் முதலில் பந்துவீசியது. இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன் குவித்தது. தொடக்க வீரர் பதும் நிசங்கா அதிகபட்சமாக 74 ரன் (60 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), தனஞ்ஜெயா டி சில்வா 33, குசால் மெண்டிஸ் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அமீரக பந்துவீச்சில் கார்த்திக் மெய்யப்பன் (சென்னையில் பிறந்தவர்) 4 ஓவரில் 19 ரன்னுக்கு 3 விக்கெட் (ஹாட்ரிக்), ஜஹூர் கான் 2, அப்சல் கான், ஆர்யன் லக்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய அமீரகம் 17.1 ஓவரில் 73 ரன்னுக்கு சுருண்டது. அப்சல் 19, ஜுனைத் சித்திக் 18, சிராக் சூரி 14 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் துஷ்மந்த சமீரா, வனிந்து ஹசரங்கா தலா 3, தீக்‌ஷனா 2, பிரமோத், தசுன் ஷனகா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இலங்கை அணி 79 ரன் வித்தியாசத்தில் வென்று 2 புள்ளிகள் பெற்றது. நிசங்கா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இலங்கை தக்கவைத்த நிலையில், தொடர்ச்சியாக 2 தோல்வியை சந்தித்த அமீரகம் முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.

நெதர்லாந்து அபாரம்: மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நமீபியா - நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த நமீபியா 20 ஓவரில் 121 ரன் எடுத்தது. பிரைலிங்க் அதிகபட்சமாக 43 ரன், வான் லிங்கன் 20, ஸ்டீபன் பார்டு 19, கேப்டன் எராஸ்மஸ் 16 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து வென்றது. மேக்ஸ் 35, விக்ரம்ஜித் 39, பாஸ் டி 30* ரன் எடுத்தனர். பாஸ் டி ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த நெதர்லாந்து 4 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடம் வகிக்கிறது.

Related Stories: