மதுரை கைவினை பொருட்கள் ஷோரூமில் இருந்து பழங்கால சிலைகள் அதிரடியாக மீட்பு: ஒடிசா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருடியது குறித்து விசாரணை

சென்னை: மதுரை சித்திரை தெருவில் உள்ள கைவினை பொருட்கள் ஷோரூமில் இருந்து 11ம் நூற்றாண்டை சேர்ந்த 3 பழங்கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை சித்திரை தெருவில் காட்டேஜ் எம்போரியம் என்ற பெயரில் உள்ள கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் பழங்கால சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் மதுரை வடக்கு சித்திரை வீதியில் உள்ள காட்டேஜ் எம்போரியம் கைவினை பொருட்கள் விற்பனை கடையில் சோதனை நடத்தினர். சோதனையின் போது கடையின் உரிமையானர் ஜாகூர் அகமது சர்க்கார்(42) மற்றும் ஊழியர்கள் 3 பேர் உடன் இருந்தனர்.

தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கடையின் மாடியில் ரகசிய அறையில் மறைத்து வைத்திருந்த 11ம் நூற்றாண்டை சேர்ந்த கல்லால் செதுக்கப்பட்ட 3 சிலைகள் இருந்தது தெரியந்தது. உடனே 3 சிலைகளையும் கைபற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதற்கான ஆவணங்களை கடையின் உரிமையாளரிடம் கேட்டனர். ஆனால் 3 சிலைகளுக்கான ஆவணங்கள் கடையின் உரிமையாளர் ஜாகூர் அகமது சர்க்காரிடம் இல்லாததால் 3 சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைப்பற்றப்பட்ட 3 சிலைகள் குறித்து நிபுணர்களிடம் விசாரணை நடத்திய போது, ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் உள்ள கோயிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம்  என்று தெரிவித்துள்ளனர். அதைதொடர்ந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் குறித்தும், திருடப்பட்ட சிலைகள் குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: