திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு நான் ரவுடியா? அர்ஜுன் சம்பத் ஆவேசம்: வக்கீல்களுடன் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு

திருச்சி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 2006ல் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் (52) உட்பட ளிட்ட 8 பேர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக திருச்சி சிஜேஎம் கோர்ட்டில் நேற்று அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் ஆஜராகினர். விசாரணை முடிந்து வெளியே வந்தவர்கள், கோர்ட் வளாகத்தில் தங்களுக்குள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வக்கீல் கென்னடி, “கோர்ட் விசாரணைக்கு வந்தவர்கள் விசாரணை முடிந்தவுடன் வெளியே செல்ல வேண்டும். அதைவிடுத்து கோர்ட் வளாகத்தை பிரசார களமாக மாற்றக்கூடாது. இவர்களை பார்த்து மற்ற ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளும் இதேபோல் நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது” என கோர்ட் போலீசாரிடம் சத்தமாக கூறினார்.

இதனால் கோபமடைந்த அர்ஜுன் சம்பத் தரப்பினர், “யாரைப் பார்த்து ரவுடி என கூறுகிறீர்கள்?” எனக்கேட்டு வக்கீல் கென்னடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சத்தம் கேட்டு அனைத்து வக்கீல்களும் அங்கு குவிந்து கென்னடிக்கு ஆதரவாக பேசியதால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே அர்ஜுன் சம்பத், மீண்டும் சிஜேஎம் கோர்ட்டுக்குள் சென்று நீதிபதி நசீர்அலியிடம் புகார் அளித்தார். இதையடுத்து நீதிபதி நசீர் அலி உத்தரவின்பேரில், அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை பாதுகாப்பாக கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டரை வெளியே அழைத்து சென்றனர்.

Related Stories: