50,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை

திருச்சி: குண்டர் சட்டத்தில் வழக்கு பதியாமல் இருக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறையும், உதவியாளருக்கு 2 ஆண்டு சிறையும் விதித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாகை மாவட்டம் தலைஞாயிறு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்த சாமுவேல்ஞானம்(50). இவர் 2011ம் ஆண்டு திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றியபோது வீரங்கிநல்லூரை சேர்ந்த துரைபாண்டியன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக ரூ.50,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக துரைபாண்டியன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் போலீசார் ஆலோசனை பேரில் கடந்த 24.11.2011 துரைபாண்டியன், லஞ்சப்பணம் ரூ.50 ஆயிரத்தை இன்ஸ்பெக்டரின் உதவியாளர் சதீஷ்(48) மூலம் சாமுவேல்ஞானத்திடம் கொடுக்கும் போது போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், உதவியாளர் சதீசுருக்கு 2 ஆ ண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி புவியரசு தீர்ப்பளித்தார். இதையடுத்து சாமுவேல்ஞானம், சதீசை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Related Stories: