இந்தியா - பாகிஸ்தானின் பஞ்சாப் எல்லையில் 4 நாளில் 3 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: அடுத்தடுத்து அத்துமீறல்கள் நடப்பதால் உஷார்

அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் பிரிவு எல்லைக்குள் கடந்த வெள்ளி கிழமையன்று ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்தது. இதனை கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அதனை சுட்டு வீழ்த்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் பிரிவு எல்லைக்குள் ராணியா பகுதியில் ஆக்டா-காப்டர் என்ற அத்துமீறி புகுந்த ஆளில்லா விமானம் ஒன்றை பி.எஸ்.எப். வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இதன் எடை 12 கிலோ உள்ளது. துப்பாக்கி சூட்டில் எட்டு இறக்கைகளில் இரண்டு இறக்கைகள் சேதமடைந்து உள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு இரவு 8.30 மணியளவில் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியான கலாம் டோகர் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. அதையடுத்து அந்த விமானத்தை, 183வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இதற்கிடையில், அப்பகுதியை சுற்றி வளைத்துள்ள போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த எல்லையில் கடந்த நான்கு நாட்களில் மூன்று ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூன்று வெவ்வேறு சம்பவங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்தடுத்த அத்துமீறல்கள் எல்லையில் நடப்பதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Related Stories: