சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து அன்புமணி தரப்பு பாமக போட்டியிடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்தித்து வருகிறார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பழனிசாமியை அன்புமணி சந்தித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அன்புமணியுடன் பாமக நிர்வாகிகள் வடிவேல் ராவணன், வழக்கறிஞர் கே.பாலு, திலகபாமா உடன் சென்றுள்ளனர். பின்னர், எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு நடத்திய நிலையில் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர் அதில்,
அதிமுக கூட்டணியில் பாமக: எடப்பாடி
அதிமுக கூட்டணியில் பாமக சேர்க்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது, தற்போது பாமகவும் கூட்டணியில் இணைந்துள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக
அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து அன்புமணி தரப்பு பாமக போட்டியிடும். வலிமையான தமிழகத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
ராமதாசுடன் பேசுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை
பாமக நிறுவனர் ராமதாசுடன் பேச்சு நடத்துவீர்களா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார்.
பாமகவுக்கு எவ்வளவு தொகுதிகள்?
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அன்புமணி தரப்பு பாமகவுக்கான தொகுதி பங்கீடு பின்னர் அறிவிக்கப்படும். தொகுதி எண்ணிக்கையை முடிவுசெய்து விட்டோம். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி, அதிமுகவினர் விரும்பியவாறு கூட்டணி அமைத்துள்ளோம். தொகுதி எண்ணிக்கையை முடிவுசெய்துவிட்டோம், மற்றவை பின்னர் அறிவிக்கப்படும்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளோம்: அன்புமணி
தொகுதிகளின் எண்ணிக்கை பிறகு முடிவு செய்யப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம். அமித் ஷா தமிழ்நாடு வந்து சென்ற நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி தற்போது அமைந்துள்ளது. உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்; அதிமுக ஆட்சியமைக்கும். அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்துள்ள நிலையில் பழனிசாமி இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே எஸ்.பி.வேலுமணி டெல்லியில் உள்ள நிலையில் பழனிசாமியும் இன்று மாலை பயணம் செய்ய உள்ளார். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம். அதிமுக அடுத்து ஆட்சியமைக்கும்.
