பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே பொறுப்பு ரோடு ஷோ-க்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி: பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியீடு

* 50 ஆயிரம் பேர் கூடும் கூட்டத்துக்கு ஒரு மாதம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்
* குடிநீர், கழிப்பிட வசதி கட்டாயம்

சென்னை: கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் பலியானதை தொடர்ந்து, தமிழகத்தில் ரோடு ஷோ-க்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே பொறுப்பு, 50ஆயிரம் பேர் கூடும் கூட்டத்திற்கு ஒரு மாதம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும், குடிநீர், கழிப்பிட வசதிகள் கட்டாயம் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

இதையடுத்து, ரோடு ஷோக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு தவெக, தமிழக மக்கள் கட்சி, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபங்களை தெரிவித்தன. அந்த ஆட்சேபங்களை பரிசீலித்து இறுதி வழிகாட்டு நடைமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் வகுக்குமாறும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், ரோடு ஷோக்கள், பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நடைமுறைகளை வகுத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தயாரித்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசியல் கட்சிகளின் ஆட்சேபனைகளை பரிசீலித்து இறுதி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், கலாச்சாரம் மற்றும் மதரீதியான நிழ்ச்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் 5 ஆயிரம் பேருக்கு மேல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது. பங்கேற்பவர்களின் பாதுகாப்புக்கு, நிகழ்ச்சி அமைப்பாளர்களே பொறுப்பாவார்கள். நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும். 5 ஆயிரம் பேருக்கு குறைவாக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் இருந்தால் ஏற்கனவே இருந்த நடைமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டும்.

பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ச்சி நடத்தும்போது சம்பந்தப்பட்ட துறைகளிடன் அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சியின் தன்மை, எந்த தேதி, எந்த இடம், எத்தனை பேர் பங்கேற்பார்கள் உள்ளிட்ட தகவல்களையும், இடத்தின் வரைபடத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பத்துடன் தர வேண்டும். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு மட்டுமே விண்ணப்பங்கள் தரப்பட வேண்டும். திடீர் நிகழ்ச்சிகள் என்றால் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை ஆணையர்களை அணுகலாம். விண்ணப்பம் மறுக்கப்பட்டால் மறுபடியும் விண்ணப்பிக்கலாம்.

* வரையறுக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 முதல் 21 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
* அரசு பரிந்துரைத்ததற்கு மாற்றாக வேறு இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 முதல் 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
* 50,000க்கும் மேல் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு 30 நாட்கள் அல்லது அதற்கு முன்பே விண்ணப்பிக்கலாம்.
* ரோடு ஷோக்களுக்கு வழித்தடம், தொடங்கும் இடம், முடிவடையும் இடம், பேசும் இடத்தை விண்ணப்பத்தில் குறிப்பிடுவது கட்டாயம் ஆகும்.
* ரோடு ஷோ தொடங்கும், முடியும் இடத்துக்கு விஐபி வரும், புறப்படும் நேரம், மக்களின் எண்ணிக்கையை தெளிவாக விண்ணப்பத்தில் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
* நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே ரோடு ஷோ நடத்தப்படும் என்று எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும்.
* மக்கள் பாதுகாப்பு, கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல் முற்றிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு ஆகும்.
* நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை வாகனங்கள் எளிதாக செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
* பொதுச்சொத்துகளின் பொருட்களுக்கு சேதம் விளைவித்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
* நிகழ்ச்சி முடிந்த உடன் நிகழ்ச்சியின் தன்மை, காயம் மற்றும் பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த இடத்தில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அல்லது மாநகராட்சியாக இருந்தால் காவல் ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* ரோடு ஷோக்கள் நடத்தும் போது தேசிய மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
* சிக்கல் இல்லாத நிகழ்ச்சியில் 200 பேருக்கு ஒரு காவலர், குறைந்த பிரச்னைகள் உள்ள நிகழ்ச்சிக்கு 100 பேருக்கு ஒரு காவலர், அதிக சிக்கல் உள்ள நிகழ்ச்சிக்கு 50 பேருக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட வேண்டும்.
* ரோடு ஷோ நடக்கும் சாலை, விஐபி பேசும் இடத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கையை குறிப்பிடுவது கட்டாயம். 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
* நிர்ணயித்த இடத்தை தவிர வேறு எங்கும் விஐபி உரையாற்றக்கூடாது.
* கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் வெயிலில் நிற்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்பு படையினருடன் இணைந்து அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும்.
* ரோடு ஷோக்கள் மாற்று பாதையில் நடத்த முடியாது:
பேரணி செல்லும் போது சாலையின் ஒரு பாதியை மட்டுமே பயன்படுத்த முடியும். கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் நெரிசலான கூட்டத்தில் பங்கேற்காததை உறுதி செய்ய வேண்டும். எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெறாமல் ரோடு ஷோக்களை மாற்றுப்பாதையில் நடத்த இயலாது.
* கூட்டத்தை ஒழுங்குப்படுத்த ஒவ்வொரு 50 நபருக்கு ஒரு தன்னார்வலரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நியமிக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசின் வழிகாடு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

3 மணி நேரத்தில்…
* அரசியல் கட்சிகள் 3 மணி நேரத்துக்குள் ரோடு ஷோக்களை நடத்தி முடிக்க வேண்டும். அரசு நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு மட்டுமே பார்வையாளர்கள் கூட முடியும்.
* எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட 50 சதவீதம் கூடுதலாக கூட்டம் இருந்தால் விதிமீறலாக கருதப்படும்.
* 300 பேருக்கு ஒரு கழிப்பறை – ஆண்களுக்கு தனியாக, பெண்களுக்கு தனியாக இருக்க வேண்டும். 300 மீட்டர் அளவில் ஒரு நடமாடும் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும்.
* ஒரு நபருக்கு 4 லிட்டர் குடிநீர், ஒவ்வொரு 100 மீட்டருக்கும் குடிநீர் வசதியை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: