திண்டுக்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல்லில் நாளை கள ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது நடக்கும் பிரமாண்ட அரசு விழாவில், 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.1,500 கோடியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க நாளை (ஜன. 7) திண்டுக்கல் வருகிறார். இதனையொட்டி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆர்டிஓ மைதானத்தில் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘திண்டுக்கல் வருகை தரும் முதலமைச்சர் ரூ.1,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
வேடசந்தூர் – திண்டுக்கல் குடிநீர் திட்டம் ரூ.135 கோடியிலும், கூட்டுறவு கலைக் கல்லூரி ரூ.75 கோடியிலும், கலை அறிவியல் கல்லூரி ரூ.15 கோடியிலும் என பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், ஒரு லட்சம் பேருக்கு பட்டா வழங்கவுள்ளார். திண்டுக்கல்லில் புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்தும் முதல்வர் அறிவிப்பார். முதல்வர் அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த மாநிலத்திலும் 50 சதவிகிதம் கொடுக்கப்படவில்லை. இந்த அறிவிப்பால் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். நாங்கள் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்’’ என்றார்.
இன்றிரவு மதுரை வருகை:
திண்டுக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்றிரவு மதுரை வருகிறார். சுற்றுச்சாலையில் உள்ள விடுதியில் இரவு தங்கும் முதல்வர், நாளை காலை 9 மணிக்கு திண்டுக்கல் கிளம்பிச் செல்கிறார். திண்டுக்கல் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை இரவு 9.40 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
