பழநி மலை- இடும்பன் மலை இடையே ரோப்கார் திட்டம் நிறைவேறுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு

பழநி: பழநி மலைக்கும், இடும்பன் மலைக்குமிடையே ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமென பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிக வருமானம் மற்றும் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோயிலில் வருடம் முழுவதும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை என திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். இதனால் சாதாரண நாட்களிலேயே 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். 3ம் படை வீடாக அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி விளங்கினாலும், 450 அடி உயரத்தில் உள்ள குன்றின் மீது இருக்கும் நவபாஷாணத்தால் ஆன முருகனையே பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

மலைக்கோயிலுக்கு வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் செல்வதற்காக கடந்த 1966ம் வருடம் மேற்கு கிரிவீதியில் இருந்து 290 மீட்டர் உயரத்தில் மலைக்கோயிலை அடையும் வகையில் 8 நிமிடத்தை பயண நேரமாக கொண்டு 36 பேர் செல்லும் வகையில் மின் இழுவை ரயில் வசதி (வின்ச்) ஏற்படுத்தப்பட்டது. அதன்பின் 1981ல் மற்றொரு இழுவை ரயிலும், 1988ல் மற்றொரு இழுவை ரயிலும் ஏற்படுத்தப்பட்டன.

தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி தெற்கு கிரிவீதியில் இருந்து 323 மீட்டர் தொலைவிற்கு 2.45 நிமிடத்தில் செல்லும் வகையில் கொல்கத்தாவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கம்பிவட ஊர்தி (ரோப்கார்) வசதி ஏற்படுத்தப்பட்டது. இதில் 1 மணிநேரத்தில் சுமார் 460 பேர் பயணம் செய்யலாம். தமிழகத்தில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட இந்த ரோப்கார் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது. அதன் முதலீட்டு தொகையான ரூ.4 கோடியை திட்டம் ஏற்படுத்தப்பட்ட ஒரே வருடத்தில் ஈட்ட முடிந்தது.

இதன் காரணமாக பழநி மலையில் இருந்து இடும்பன் மலைக்கும் இடையேயும், பழநியில் இருந்து கொடைக்கானலுக்கும் ரோப்கார் இயக்க வேண்டுமென பக்தர்கள், சுற்றுலா பயணிகளிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதுதொடர்பாக பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினார். டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தார். திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி பாராளுமன்றத்தில் பழநி- கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்காக 3 முறை பேசினார்.

தொடர் முயற்சிகளின் பயனாக தற்போது பழநி- கொடைக்கானல் இடையே ரோப்கார் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோல் பழநி மலை, இடும்பன் மலை இடையேயும் ரோப்கார் அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா நகரமாக உருவெடுப்பது உறுதி

இதுகுறித்து இந்து தமிழர் கட்சியின் நிர்வாகி ராம.ரவிக்குமார் கூறியதாவது:

பழநி- கொடைக்கானல் ரோப்கார் திட்டம் நிறைவேற்றப்படும் நேரத்தில், பழநி மலை- இடும்பன் மலை ரோப்கார் திட்டமும் நிறைவேற்றப்பட்டால் கோயில் நகரான பழநி சுற்றுலா நகரமாக உருவெடுப்பது உறுதி. இதன்மூலம் பழநி நகரில் உள்ள வணிகர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். பழநி வரும் பக்தர்களுக்கு இடும்பன் மலையையும் எளிதில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கூறினார்.

கேரள பக்தர்கள் அதிகளவு செல்வர்

இதுகுறித்து ஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை நிர்வாகி செந்தில்ஜி கூறியதாவது:

பழநி மலையை போன்றே இடும்பன் மலையும் பழம்பெருமை வாய்ந்தது. இன்றளவும் பழநி கோயிலுக்கு வரும் கேரள மாநில பக்தர்களில் பெரும்பாலானோர் இடும்பன் மலைக்கும் சென்று வருகின்றனர். 14 அடி உயரத்தில் உள்ள இடும்பன் சிலை காண்போரை பரவசமடைய செய்யும் வகையில் இருக்கும். பழநி மலை- இடும்பன் ரோப்கார் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இடும்பன் மலையும் பிரசித்தி பெற்றதாக மாறும். இவ்வாறு கூறினார்.

Related Stories: