ராஜபாளையம் அருகே தொடர் மழையால் சாஸ்தா கோயில் அணை நிரம்பியது: பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, தொடர் மழையால், தேவதானம் சாஸ்தா கோயில் அணை நிரம்பியது. இதனால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராபாளையத்தை அடுத்த சேத்தூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் தேவதானம் சாஸ்தா  கோயில் அணை உள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட இந்த அணை 33 அடி உயரமுள்ளது. இது பாசனத்திற்கும், சுற்றுப்புற கிராம மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையால், அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். இந்த அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை தேவதானம், சேத்தூர், சுந்தரராஜபுரம், சொக்கநாதன்புத்தூர், புத்தூர், இளந்திரைகொண்டான், முகவூர், கொல்லங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்துவர். இதனால், இப்பகுதி விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.  இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: தொடர்மழையால் தேவதானம் சாஸ்தா கோயில் அணை நிரம்பியது. இதனால், இந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது விவசாய பணிகள் தொடங்கியுள்ளன.  எனவே, மாவட்ட நிர்வாகம் விரைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அணையை பாசனத்திற்காக திறந்து வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: