ஜோ பிடன் கூறிய கருத்தால் அதிருப்தி; அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்: வெளியுறவு அமைச்சர் ஆவேசம்

கராச்சி: அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பாகிஸ்தான் குறித்து கூறிய கருத்துக்கு விளக்கம் கோரும் வகையில் அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது.  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ஜோ பிடன், ‘எவ்வித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் நாடு தான் உலகின் மிக ஆபத்தாத நாடுகளில் ஒன்றாக இருக்கிறது’ என்று கூறினார். அமெரிக்க அதிபரின் இந்த பேச்சு பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ-சர்தாரி கூறுகையில், ‘பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை பொறுத்தவரை அதன் பாதுகாப்பு குறித்த சர்வதேச விதிகளை கடைபிடிக்கிறோம்.

இவ்விஷயத்தில் அமெரிக்க அதிபரின் கருத்து ஆச்சரியமளிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபரின் உரை குறித்து விளக்கம் கோரப்படும். இதுபோன்ற கருத்துகள் அமெரிக்காவுடனான உறவுகளை பாதிக்கும். பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்கா எழுப்பி உள்ள கேள்விகளுக்கும், கவலைகளுக்கும் எங்களால் பதிலளிக்கப்படும்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகளை பாகிஸ்தான் அதிகாரிகள் அமெரிக்கா தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்’ என்றார். ஒரு காலத்தில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்த பாகிஸ்தானுக்கு எதிரான கருத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபானுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவிக்கிறது.

Related Stories: