‘ரூட் தல’ பிரச்னையில் ராயபுரம் ரயில் நிலையத்தில் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: வேளச்சேரி - அரக்கோணம் மின்சார ரயிலில், யார் ரூட் தல என்ற பிரச்னையில், ராயபுரம் ரயில் நிலையத்தில் கற்களை வீசி தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான கல்லூரி மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 14ம்தேதி மதியம் சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் வந்த மாநிலக்கல்லூரி மாணவர்கள், ராயபுரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் கீழே இறங்கி கற்களை எடுத்து ரயில் உள்ளே இருந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது தாக்கினர். பதிலுக்கு உள்ளே இருந்த மாணவர்கள் கீழே இறங்கி கற்களை வீசி தாக்கினர். பின்னர் அதே ரயிலில் ஏறிச் சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள் வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் சென்றவுடன் ரயிலின் சங்கிலியை இழுத்து நிறுத்தினர்.

இதுதொடர்பாக, ராயபுரம் ரயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மோதலில் ஈடுபட்டது மாநிலக்கல்லூரி மாணவர்கள் என்பதும், யார் ரூட் தல என்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே இருதரப்பும் மோதிக்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த காந்த் (19),  தடாவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். காந்தை புழல் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை கெல்லீசில் உள்ள காப்பகத்தில் அடைத்தனர். மேலும், கடந்த வாரம் கொருக்குப்பேட்டை வழியாக சென்ற மின்சார ரயிலில் கத்தியை நடைமேடையில் உரசி சென்றது தொடர்பாக, பொன்னேரியை சேர்ந்த விஜய் சந்தோஷ் (19) என்பவரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் பிரசிடென்சி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories: