பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் லெவன் தயார்; சூர்யகுமார் யாதவ் கேம் சேஞ்சராக இருப்பார்: இந்திய கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

மெல்போர்ன்: டி.20 உலக கோப்பை தொடர் நாளை தொடங்கும் நிலையில் மெல்போர்னில் இன்று காலை தொடருக்கான வெற்றி கோப்பை அறிமுக நிகழ்ச்சி மற்றும் கேப்டன்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்தியா உள்பட 16 அணிகளின் கேப்டன்கள் கலந்துகொண்டனர். அப்போது அதிகமாக ரோகித்சர்மாவிடம் தான் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளித்து ரோகித்சர்மா கூறியதாவது: பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். எனது தலைமையில் அவர் இதுவரை விளையாடியது இல்லை. நாளை பிரிஸ்பேனில் பயிற்சி அமர்வில் அவர் இணைகிறார்.

அவரை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். சூர்யாகுமார் யாதவ் சிறந்த ஃபார்மில் இருக்கிறார், மிடில் ஆர்டரில் அவர் நன்றாக பேட்டிங் செய்வார் என்று நம்புகிறேன். அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அவர் விளையாடும் போதெல்லாம் ஆட்டத்தை மாற்றுவார். எங்களின் கேம் சேஞ்சராக இருப்பார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவன் வீரர்களை ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். அந்த வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நிமிடத்தில் வீரர்கள் தேர்வில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் நன்றாகத் தயாராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன், கடைசி நிமிடத்தில் யாரிடமாவது நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று சொல்வதை நான் நம்ப விரும்பவில்லை.

வீரர்கள் காயங்களுக்கு ஏமாற்றத்தைக் காட்ட முடியாது. அடுத்து என்ன செய்ய முடியும் என்பதை சிந்திக்கவேண்டும். எங்கள் மற்ற இளம்வீரர்களை ஆதரித்துள்ளோம். அவர்கள் நன்றாக ஆடுவார்கள் என நம்புகிறேன். என்றார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில்,“பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு சிறந்த ஒன்றாகும். இத்துறையில் நாங்கள் யாருக்கும் இரண்டாம் பட்சம் இல்லை. அனைவரும் நன்றாக பந்து வீசுகிறார்கள். ஷாஹீன் அப்ரிடியின் வருகை அதை மேலும் வலிமையாக்கும். அப்ரிடி மற்றும் பக்கர் ஜமான் உடல் தகுதியுடன் உள்ளனர். அவர்கள் பயிற்சி போட்டிகளில் ஆடுவார்கள், என்றார். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், நாங்கள் பட்டத்தை தங்க வைக்க முடியும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளோம், என்றார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்,“ஆஸ்திரேலியா மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறது. சொந்த மண்ணில் ஆடுவது அவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் டி20யில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம், என்றார். முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது 28வது பிறந்தநாளையொட்டி சக கேப்டன்கள் முன்னிலையில் கேக் வெட்டினார். இந்த கேக்கை பிரத்யேகமாக ஆஸி. கேப்டன் ஆரோன்பிஞ்ச் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories: