முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா: திமுக எம்பிக்கள் பங்கேற்பு

அம்பத்தூர்: திமுக தலைவராக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் மேற்கு பகுதி திமுக சார்பில், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் ‘சமூக நீதி தத்துவம் சாதிக்கும் சரித்திரம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளரும் சென்னை மாநகராட்சி 8வது மண்டல குழு தலைவருமான கூ.பீ.ஜெயின் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, மாநில வர்த்தகரணி இணை செயலாளர் வெற்றி அழகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

துணை பொதுசெயலாளரும் மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்பி, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், பிரசாரக்குழு தலைவர் அருள்மொழி, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் கே.பாலபாரதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதையடுத்து, எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், ‘1989ம் ஆண்டு ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உள்ளது என கூறியவர் கலைஞர்.  அதன்பிறகுதான் ஒன்றிய அரசு பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொண்டு வந்துள்ளது. தென் இந்தியாதான் மொழிவாரி மாநிலமாக உள்ளது. வடஇந்தியாவில் மொழிவாரி இல்லை’ என்றார்.

தொடர்ந்து  எம்பி கனிமொழி பேசுகையில், ‘பெண்கள் உரிமைகள், அவர்கள் வளர்ச்சிக்காக எடுக்கும் முன்னெடுப்பு எந்த வகையிலும் தடைப்படக்கூடாது என்று பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், ஆட்சி பொறுப்பேற்ற அன்றே நிறைவேற்றினார் முதலமைச்சர். இந்தி மொழியை எப்படியாவது மக்களிடம் திணித்தே ஆகவேண்டும் என ஒன்றிய அரசு செயல்படுகிறது. இதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் நமது முதல்வர். அதன்பிறகுதான் பிற மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டது’ என்றார்.

Related Stories: