களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து மீண்டும் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்-விவசாயிகள் வேதனை

களக்காடு : களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் மீண்டும் அட்டகாசம் செய்ததில் 100 வாழைகள் நாசமானது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மலையடிவாரத்தில் கீழசேனி விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை, நெல் பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். சமீபகாலமாக இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளி வந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. மேலும் வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றுள்ளன.

இதனால் 100க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்த 4 மாத வாழைகள் ஆகும். நாசமான வாழைகள் மாவடியை சேர்ந்த விவசாயிகள் ராமலிங்கம் (53), டேவிட் (51), ராஜலிங்கம் (52)ஆகியோர்களுக்கு சொந்தமானது ஆகும். இதனால் அவர்களுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 இதுபற்றி அவர்கள் திருக்குறுங்குடி வனத்துறை அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். களக்காடு மலையடிவார பகுதிகளில் இதுபோல காட்டு பன்றிகளின் அட்டகாசம் எல்லை மீறி வருகிறது. பன்றிகள் தொடர்ந்து வாழை மற்றும் விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுபற்றி விவசாயி ராமலிங்கம் கூறுகையில், ‘அதிகரித்து வரும் காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக உள்ளனர். பெருகி வரும் பன்றிகளால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே காட்டு பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்” என்றார்.

Related Stories: