நெமிலி ஒன்றியத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடம் மாற்ற பெற்றோர் கோரிக்கை

நெமிலி: நெமிலியில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி என 90 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் சுமார் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மற்றும் அண்மையில் சில நாட்களாக பெய்த மழைக்காரணமாக நெமிலி ஒன்றியத்தில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் நெமிலி அடுத்த துறையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள ஒரு கட்டிடமும் பழுதடைந்துள்ளது. இதனால் அந்த கட்டிடம் முழுவதும் நீர் கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. பாதுகாப்பு கருதி அந்த கட்டிடத்தை ஆசிரியர்கள் பூட்டுப்போட்டு அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்துகின்றனர்.

மேலும் அந்த கட்டிடத்தில் விரிசல் இருப்பதால் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து இந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றி விட்டு மாற்று கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: