முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையில் பிரதமர் பங்கேற்கவில்லை: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழகத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை என மாநில பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு நேற்று காலை சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியை முதன்முதலில் இந்தியாவில் கட்டாய மொழியாக திணித்தது காங்கிரஸ்தான். பிரதமர் மோடி அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆறாம் வகுப்பு வரை மாணவர்கள், அவரவர் தாய்மொழியில்தான் படிக்க வேண்டும் என கூறுகிறது. அப்படி பார்த்தால், தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் தாய்மொழியில்தான் கல்வி கற்க வேண்டும்.

வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும், அதை தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் பாஜ வெற்றி அடைந்து ஆட்சியைப் பிடிக்கும். இந்த மாதம் 30ம் தேதி நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று ஒரு தகவல் பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல, பொய். பிரதமரின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் 2 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்படும். ஆனால், பிரதமரின் பயணத் திட்டத்தில் தமிழகம் வருவதாக திட்டமில்லை. எனவே, இத்தகவலை யாரோ சிலர் கிளப்பி விடுகின்றனர். ஆனால், அதே நேரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது நாங்கள் அபரிமிதமான மதிப்பு, மரியாதை வைத்திருக்கிறோம். முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பாஜ சார்பில் கலந்து கொள்வோம். வரும் 2023ம் ஆண்டு நடைபெறும் குருபூஜையில் பிரதமர் பங்கேற்க அழைப்பு விடுப்போம்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Related Stories: