மீண்டும் ஜெர்மனிக்கு அனுப்பப்படுவாரா சுபாஷ் கபூர்?.. தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ஜெர்மனி அரசு, இந்திய அரசுக்கு கடிதம்..!

பெர்லின்: சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ஜெர்மனி அரசு, இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை 5 வழக்குகளில் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தார்கள். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு சிபிஐ மூலமாக சர்வதேச போலீசார் உதவியுடன் ஜெர்மன் நாட்டில் இருந்து சுபாஷ் கபூரை கைது செய்து தமிழ்நாடு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தார்கள். தொடர்ந்து சிறையில் இருக்கும் சுபாஷ் கபூர் மீதான வழக்குகள் கடந்த 10 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக 18 தொன்மையான திருடியதற்கான வழக்கில் தான் ஜெர்மனியில் இருந்து சுபாஷ் கபூர் கொண்டு வரப்பட்டார். ஆனால் அந்த வழக்கில் இதுவரை எந்தவித தீர்ப்பும் வழங்கப்படாமல், தண்டனையும் வழங்கப்படாமல் காலதாமதம் ஆன காரணத்தினால் ஜெர்மனி அரசு சுபாஷ் கபூரை மீண்டும் அனுப்ப வேண்டும் என்ற கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இதனால் இந்த வழக்கு மட்டுமல்லாமல் இந்தியா தொடர்பான எந்த வழக்குகளிலும் தாங்கள் ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்ற ஒரு கடிதத்தை ஜெர்மனி அரசு இந்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் தமிழக செயலாளர் இறையன்புவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய அரசின் கடிதத்தை அடுத்து சுபாஷ் கபூர் மீதான சிலைக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  இதனிடையே பிரதமர் ஜெர்மனி பயணம் மேற்கொள்ள திட்டம் உள்ளதால் அதற்கு முன்பாக சுபாஷ் கபூர் வழக்கை முடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுவரை 10 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் சுபாஷ் கபூரை ஜெர்மனி நாட்டுக்கு திரும்ப அனுப்புவதற்கான சாத்தியங்கள் தெரிகிறது. இதனால் சுபாஷ் கபூர் மீதான மீதி வழக்குகளில் தமிழகம் அழைத்து வந்து அவரை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: