டி,20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றமில்லை; குல்தீப் யாதவ் பேட்டி

புதுடெல்லி: இந்தியா-தென்ஆப்ரிக்கா அணிகள் இடையே டெல்லியில் நேற்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 99 ரன்னில் சுருண்டநிலையில் இந்தியா 19.1ஓவரில் 3விக்கெட் இழப்பிற்கு 105ரன் எடுத்து வெறறிவாகை சூடியது. இந்த வெற்றிமூலம் 2-1 என தொடரை கைப்பற்றியது. வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் அளித்தபேட்டி: இளம்வீரர்கள்  விளையாடிய விதம் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இளம் வீரர்கள் பொறுப்புடன் முதிர்ச்சியை வெளிப்படுத்தி விளையாடினர். முதல் ஆட்டத்தில் நாங்கள் நிறைய கேட்ச்களை தவறவிட்டோம்.

ஆனால் ஒருபோதும் நாங்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுத்துக்கொள்ளவில்லை. நான் இந்த பயணத்தை அனுபவித்து வருகிறேன், அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். கடினமான பேட்டிங் ஆடுகளங்களில் வீரர்கள் சிறப்பான தன்மையை வெளிப்படுத்தினர். பந்து வீச்சாளர்கள் செயல்பாடு அபாரமாக இருந்தது, என்றார். 4விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ் கூறுகையில், உண்மையாகச் சொல்வதென்றால், மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.. எனது தன்னம்பிக்கையை இந்த போட்டி அதிகமாக்கி இருக்கிறது. எனது பந்துவீச்சை ரசிக்கிறேன். முடிவைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை, நல்ல பகுதிகளில் பந்து வீச முயற்சிக்கிறேன். சையது முஷ்டாக் அலி போட்டியில் சிறப்பாக செயல்படுவதே எனது அடுத்த இலக்கு. டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி சிறந்த ஒன்றாகும், என்றார். தொடர் நாயகன் விருதுபெற்ற முகமது சிராஜ் கூறுகையில், மிகப்பெரிய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது நம்பிக்கையை அளிக்கிறது. சரியான லைன் மற்றும் லென்த் இரண்டில் மட்டுமே பந்துவீச வேண்டும் என்று முழு கவனத்துடன் செயல்பட்டேன். வேகப்பந்துவீச்சுக்கு நான் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. ஒரு வேகப்பந்து வீச்சாளராக நமக்குள் தீப்பொறி மற்றும் பேரார்வம் இருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லை என்றால் முழு உத்வேகத்துடன் செயல்பட முடியாது.தொடர் நாயகன் விருது கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது, என்றார்.  வெற்றிக்கு பின் இந்திய வீரர்கள் டிரசிங் ரூமில் பஞ்சாபி பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.

Related Stories: