துபாயில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட விண்ணில் பறக்கும் X-2 கார்: ஒரே நேரத்தில் இருவர் பயணிக்கும் வகையில் வடிவமைப்பு

துபாய் : சீன நிறுவனம் வடிவமைத்து இருக்கும் அதிநவீன பறக்கும் கார் துபாய் தனது சோதனை பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. X-2 என பெயரிடப்பட்டுள்ள 2 இருக்கைகளை கொண்ட இந்த மின்சார பயணிகள் ட்ரோன் செங்குத்தாக புறப்பட்டு அதே நிலையில் தரை இறங்கும் ஆற்றல் உடையது. வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களில் பின்னணியில் நிலத்தில் இருந்து செங்குத்தாக பறந்து வானத்தை மிதக்கும் வாகனம். காற்றில் பறக்கும் மெகா சைஸ் கருவண்டாக காட்சியளிக்கும் அதிநவீன பறக்கும் கார். இது ஹாலிவுட் திரைப்படத்திற்காக கிராபிக்ஸ் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் என்று நினைத்தால் அது தவறு.

X பெங் சீன நிறுவனம் வடிவமைத்து தயாரித்து இருக்கும் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் கார் தான் இது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு ட்ரோன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு X-2 என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ட்ரோன்களை போல் 4 புரொப்பல்லர்களால் இயங்கும் X-2 பறக்கும் காரில் ஒரே நேரத்தில் 2 பேர் பயணிக்கலாம். பொதுவாக விமானங்கள் ஓடுதளத்தில் ஓடிய பிறகு வானத்தில் உயர எழும்பி பறக்கும் நிலையில் இவ்வகை பறக்கும் கார்கள் செங்குத்தாக உயரே எழும் நுட்பத்தை கொண்டுள்ளன.

சுமார் 90 நிமிடங்கள் துபாயில் நடைபெற்ற சோதனை ஓட்டம் வான்வெளி போக்குவரத்தில் ஒரு புதிய தொடக்கம் என்று இதனை தயாரித்துள்ள சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. பறக்கும் கார் சோதனை வெற்றி அடைந்துள்ள நிலையில் முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் அவற்றை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர சீன நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவ்வகை கார்களை வீடு மற்றும் அலுவலக மாடியில் கூட தரையிறக்க முடியும் என்பதால் X-2 பறக்கும் கார் நகரங்களுக்கு இடையேயான எதிர்கால வான்வெளி போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      

Related Stories: