நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் நாடி மூலம் நோய் கண்டறிய நவீன கணினி சிகிச்சை கருவி-பொறியியல் பேராசிரியை இணைந்து தயாரிப்பு

நெல்லை : சித்த மருத்துவத்தில் நாடி பார்த்து நோயின் தன்மை கண்டறிவதற்கு நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை நெல்லை அண்ணா பொறியியல் கல்லூரி பேராசிரியைகள் கூட்டு முயற்சியில் தயாரித்துள்ளனர்.சித்த மருத்துவத்தில் நோக்கு, தொடு உணர்வு, கேள்வி என்னும் மூன்று வித வழிமுறைகளினால் அதாவது நோயாளியின் உடல் முதலியவற்றை கண்ணால்  பார்த்தல், கைகளால் தொட்டு உணர்தல், கேள்விகள் கேட்டு நோயாளியுடன்  கலந்துரையாடல், அல்லது நோயாளியின் உற்றார் உறவினரிடம், அருகில் இருந்து  கவனிப்பவரிடம் கலந்து பேசி புரிதல் முதலியவற்றால் நாடி, உணர்தல், நா, நிறம், மொழி, விழி, மலம், சிறு நீர் என்னும்  எட்டு வகை ஆய்வுகளைச் செய்து, அவற்றின் மூலமாய் நோய்களைக் கண்டறிந்து  அதற்குத் தகுந்த மருத்துவம் செய்யப்படும். இவற்றில் நாடி பார்த்தல் மிகவும்  முக்கியமானதாகும்.

மனித உடலில் அடிப்படையாகவும் சூட்சுமமாகவும்  மூன்று கோடியே ஐம்பது லட்சம் நாடிகள் உள்ளன. இவற்றில் ஸ்தூல நாடிகளில் எழு  நூறு நாடிகள் முக்கியமானவை யென்றும், அவற்றில் இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிங்குவை, புருஷன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு ஆகிய பத்து நாடிகள் மிக முக்கியமானவை யென்றும், இதனையே தச நாடிகளென்றும் கூறுவர்.

இடது  நாசியில் இட கலையும், வலது நாசியில் பின் கலையும், பிரம்ம மந்திரத்தில்  சுழு முனையும், இடது நேந்திரத்தில் காந்தாரியும், வலது நேந்திரத்தில்  அத்தியும், வலது கையில் குருவும், இடது கையில் சிங்குவையும், நாவில்  அலம்புடையும், ஆண்குறியில் புருடனும், சிரத்தில் சங்கினியும்  வியாபித்திருக்கும். இவை அபாணன், பிராணன், சமானன், உதானன், வியானன், நாகன்,  கூர்மன், கிருதரன், தேவதத்தன், தனஞ்செயன் எனும் பத்து வளிமங்களையும்  ஆதாரமாகக் கொண்டுள்ளது. இந்த பத்து நாடியில் இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற  மூன்று நாடிகளே பிரதானமானவை.

இதில் இடகலையை வாத நாடியென்றும்,  பிங்கலையை பித்த நாடியென்றும், சுழுமுனையை கப நாடியென்றும் பிரிப்பர்.  உடலில் காது, மூக்கு, கண்டம், கரம், புருவம், உச்சி உள்ளிட்ட 10 இடங்களில்  நாடியை பார்க்கலாம். ஆனாலும் கரங்களில் பார்க்கக் கூடியதே சுலபமானதாக  உள்ளதால் அதுவே வழக்கமாக உள்ளது. ஆண்களுக்கு வலக்கரத்திலும், பெண்களுக்கு  இடக்கரத்திலும் நாடி பார்க்கப்படுகிறது. கை மணிக்கட்டிலிருந்து ஒரு  அங்குலம் தள்ளி பெருவிரல் பக்கமாக மூன்று விரல்களை மேலாகப் பொருத்தி,  இலேசாக அழுத்தியும், தளர்த்தியும் பார்க்க, ஆள்காட்டி விரலில் உணர்வது  வாதமென்றும், நடுவிரலில் உணர்வது பித்த மென்றும், மோதிர விரலில் உணர்வது கப  மென்றும் அறிந்து கொள்வர்.

இவ்வாறு கையை அழுத்திப்பிடித்து நாடி பார்க்கும் முறையை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் நவீன முறையில் கண்டறிந்துள்ளனர். இக்கல்லூரியின் இணைப்பேராசிரியர் சுபாஷ் சந்திரன், நெல்லை அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் டாக்டர் டீஜே, உதவி பேராசிரியை பிரியதர்ஷணி, ஆராய்ச்சி மாணவி காவிய இலக்கியா ஆகியோர் கூட்டாக இணைந்து கணினி மூலம் நாடி பார்க்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முறையை செயல்படுத்தும் போது நோயாளியின் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகத்துல்லியமாக கண்டறிய முடிகிறது என இவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த முறையில் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு கூடுதல் எளிமை முறையை கையாள திட்டமிட்டுள்ளோம். கைபேசி செயலியில் இதனை கொண்டுவர முடியுமா எனவும் ஆய்வு ெசய்து வருகிறோம். என்றனர்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் முகம்மது ரபீக் நேற்று முதலாவதாக இந்த முறையில் தனது உடல் நிலையை பரிசோதித்துக் கொண்டார்.

Related Stories: