தேனி மக்களவை தேர்தலில் பணம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மேல்முறையீடு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேனி மக்களவை தேர்தல் வெற்றி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தேனி தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில்,“தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரவீந்திரநாத் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்தார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக ரவீந்தரநாத் வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்,’ என தெரிவித்திருந்தார். அதேபோன்று வாக்காளர் மிலானியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் ரவீந்திரநாத் தரப்பில் தனியாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. 2 மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ரவீந்திரநாத் கோரிக்கையை நிராகரித்ததோடு, அவரது மனுவையும் தள்ளுபடி செய்து  உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரவீந்திரநாத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு,  நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய நிலையில் நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள், ரவீந்திரநாத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: